பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆளுகிறது. மகரம் வேகமெனில் கும்பம் நிதானம். நீங்கள் ஆற அமர யோசித்துத்தான் எதையும் செய்வீர்கள். தன்னுடைய சாதனைகளையும், செயல்களையும் மற்றவர்கள் புகழ்ந்து பேசவில்லையெனில், நீங்களே உங்களைப் புகழ்ந்து கொள்வீர்கள். ‘‘நான் செஞ்ச சாதனைய நானே சொல்றதுல என்ன தப்பு’’ என்பீர்கள். போஜனப் பிரியரான நீங்கள், ருசிக்காக - அது ஐந்து கிலோமீட்டராக இருந்தாலும் சரிதான் - தேடிச் சென்று சாப்பிட்டு விட்டு வருவீர்கள். எல்லோரும் வேண்டுமென்று விரும்புவீர்கள். எல்லோரையும் ஒன்று சேர்ப்பீர்கள். ஆனால், சட்டென்று விட்டுப் பிரிந்து வந்து விடுவீர்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தேடித்தேடி உதவி செய்தாலும், அவ்வப்போது உதாசீனப்படுத்துவீர்கள். உங்களை சிலர் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதற்குக் காரணமாகவும் நீங்களே இருப்பீர்கள். பிறர் செய்த உதவிகளை மறப்பீர்கள். பெண்களால் அதிகம் நேசிக்கப்படுவீர்கள். ஒருவிதமான ஈர்ப்பும் வசீகரமும் உங்களிடத்தில் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையே ஒரு திருவிழா என்பதுபோல எல்லாவற்றையும் அனுபவிப்பீர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அலங்காரமாக இருப்பார்கள். ஆனால், இந்த லக்னத்தில் நீங்கள் பிறந்திருப்பதால் அழுத்தமாக இருப்பீர்கள்.
எது கேட்டாலும் பொறுமையாகவும் சாந்தமாகவும் பதில் சொல்வீர்கள். எல்லா விஷயங்களையும் கொஞ்சம் விட்டுப் பிடிப்பீர்கள். ‘‘எங்க போயிடப் போறாங்க’’ என்பதுதான் உங்களின் அடிப்படை மனோநிலையாக இருக்கும். குடத்திற்குள் என்ன இருக்கிறது என்பதைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்வது போல, எத்தனை வருடங்கள் பழகினாலும் முழுமையாக எதையும் வெளிப்படுத்த மாட்டீர்கள். எதிராளியை பேச விட்டு, அவர்களின் நாடி பிடித்து பார்த்து விட்டுத்தான் தான் சொல்ல வேண்டிய விஷயத்தைப் பேசுவீர்கள். எத்தனை திறமைகள் மறைந்து கிடந்தாலும் சரியாகவும் முறையாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தத் தெரியாது திணறுவீர்கள். எவரேனும் தூண்டினால்தான் வெளிக் கொணருவீர்கள்.
உங்கள் வாழ்வை மாற்றும் வல்லமை கொண்ட முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி போன்றவை வருகின்றன. இந்த மூன்று கிரகங்களும் உங்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் சரிதான்... உங்களுக்கு நன்மையையே செய்வார்கள். நிம்மதியான வாழ்க்கையை சுக்கிரன்தான் தீர்மானிக்கிறார். பாக்யாதிபதியான ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். என்றும் வற்றாத ஜீவனத்தையும், பணப் பெருக்கத்தையும் இந்த பாக்கிய ஸ்தானம்தான் தீர்மானிக்கிறது. சேமிப்புகளைக் கூட இந்த இடம் பேசுவதால், வங்கிக் கணக்கில் பணம் நிரம்பி வழியும்.
தந்தையைப் பற்றியும் இந்த இடம் பேசுவதால், சொத்து முதல் அவரின் அறிவு வரை அப்படியே உங்களுக்கு வரும். வாழ்வின் ஒவ்வொரு தடத்திலும் தந்தையின் அரவணைப்பும் தேற்றுதலும் இருக்கும். தடுக்கி விழாமல் தூக்கி நிறுத்துபவராக தந்தையார் இருப்பார். ஆனாலும் ஏதோ சில காரணங்களால் அப்பாவோடு கருத்து மோதல்கள் வந்துபோகும். ஏனெனில், பிதுர்காரகனான சூரியனும், லக்னாதிபதியான சனியும் உள்ளூர பகையாக இருப்பதால் தந்தையிடமிருந்து வித்தியாசப்பட நினைப்பீர்கள். சார்ந்திருக்கக் கூடாது என்று ஒரு கட்டத்தில் முடிவெடுப்பீர்கள். ஆனால், அதை அதிகம் வெளிப்படுத்த மாட்டீர்கள். இதே சுக்கிரன்தான் தாய் ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். ‘‘நான் நல்லாயிருக்கேன்னா எங்கம்மாவாலதான்’’ என்று அடிக்கொரு தடவை சொல்வீர்கள். இந்த சுகஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், வீடு முதல் வேலை செய்யும் இடம் வரை சொகுசாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். வசிப்பது சிறிய வீடாக இருந்தாலும், கண்ணுக்கு அழகாக வைத்துக் கொள்வீர்கள். மாபெரும் போராட்டமான வாழ்க்கையை எதிர்கொண்டு முன்னேறும் அளவுக்கு சுக்கிரன் உங்களை வைக்க மாட்டார். அடிப்படையிலேயே சில வசதிகளை கொடுத்து விட்டு முன்னேற வைப்பார்.